CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 1, 2009

மறுக்க முடிவதில்லை .....



நீ என்னோடு இருக்கின்ற
எப்போதோ எடுத்த நிழற்படங்கள்

நீ இப்போது என்னோடு இல்லாத
நிஜத்தை நினைவுபடுத்தும் போதெல்லாம்

நிஜத்தில் உன் நினைவுகள் என் நிழலாய் என்றும்
என்னுடன் இருப்பதை ஏனோ மறுக்க முடிவதில்லை .....

Thursday, November 5, 2009

என் சொந்தக் காதல் .....




காதல் கடிதம் எழுத
தோழனிடம் கொஞ்சம் கவிதைகள் கடன் வாங்கி

காதல் பரிசு வாங்க
தோழியிடம் கொஞ்சம் ரசனைகளைக் கடன் வாங்கி

வளர்த்த கடன்காரக் காதல் அல்ல என் காதல் ......

என் கவிதைகளில் ரசனை இல்லாமல் போனாலும்
என் ரசனைகள் கவிதையாய் தோன்றாமல் போனாலும்

என் காதல் எனதே எனதான சொந்தக் காதல் ......

Saturday, October 3, 2009

web site hit counter

Friday, October 2, 2009

காலத்தை வென்ற நினைவுகள்



நீ என்னோடு இருக்கின்ற நேரங்களில்
நிகழ்காலத்தில் வாழ்கிறேன்...

உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில்
வருங்காலத்தில் வாழ்கிறேன்...

உன்னைப் பார்த்துப் பேசி சென்றவுடன்
கடந்தகாலத்தில் வாழ்கிறேன்...


என் காலத்தை வென்ற
உன் நினைவுகள்......

Wednesday, September 30, 2009

நம் வாழ்வின் முரண்பாடுகள்....




சலிப்பாகிப் போன சந்தோஷங்கள் ..
சங்கடமாகிப் போன சவுகரியங்கள்..

எரிச்சலாகிப் போன இயந்திர வாழ்வு..
ஏமாற்றமாகிப் போன கடந்த காலங்கள்...

கசப்பாகிப்போன காரியங்கள்...
கல்லறையாகிப்போன காதல்கள்...

நெருப்பாகிப் போன நிஜங்கள் ..
நெருடலாகிப் போன நித்திரைகள்....

துணிவை இழந்த தேடல்கள்..
தூக்கம் இழந்த தூரிகைகள்...


நிஜத்தை மறந்த நினைவுகள்...
நினைக்க மறந்த நிஜங்கள்....

வாழும் முரண்பாடுகள்..
நம் வாழ்வின் முரண்பாடுகள்....

Saturday, August 22, 2009

நீ பிறந்த நாள்......

அருகருகே இருந்தும்

அதிகம் பேசிக் கொள்ளாமலே..

அடிக்கடி பேசிக் கொண்டாலும்

அன்பை வெளிப்படுத்திக் கொள்ளாமலே..

விவரங்கள் தெரிந்திருந்தும்

விசாரித்துக் கொள்ளாமலே...

ஆறுதல்கள் தேவையிருந்தும்

ஆசைகள் கோடியிருந்தும்

நேரங்கள் நிறைய இருந்தும்

நேசத்தை சொல்லிக் கொள்ளாமலே

கடந்து கொண்டிருக்கும் நம் இயந்திர வாழ்வில்....

நம் உறவுகளின் பலங்களை...

நேசத்தின் நினைவுகளை..

ஆறுதல்களின் அவசியங்களை...

நட்பின் நிஜங்களை...

வெளிப்படுத்த உதவ ஒரு பொன்னாள்....

நீ பிறந்த நாள்......

Friday, August 21, 2009

உன் மரணப் படுக்கையில்....

உன் மரணப் படுக்கையில் நான் உன்னுடன் இருக்க மாட்டேன்....

என்னை மன்னித்து விடு அன்பே....

நீ இறப்பதற்கு முன்பே நான் இறந்து விடுவேன்,,,

அடுத்த ஜென்மத்தில் உனக்கு மூத்தவனாய்

நான் பிறந்து காத்திருக்க வேண்டுமல்லவா? :)....

Thursday, August 20, 2009

தவிக்கிறேன்....

நான் ஒரு ஓவியனாய் பிறந்திருந்தால்

உன் முகத்தினை வரைந்தே என் கை ரேகை அழிந்திருக்கும்...

ஒரு சிற்பியாய் பிறந்திருந்தால்

உன் உருவத்தினை செதுக்கியே என் உ ளியும் உடைந்திருக்கும்...

ஒரு பாடகனாய் பிறந்திருந்தால்

உன் நினைவுகளை வர்ணித்தே என் குரலும் கரைந்திருக்கும்

அட, ஒரு கவிஞனாய் பிறந்திருந்தால் கூட

உன் காதலை விவரித்தே என் சொற்களும் தீர்ந்திருக்கும்..........

ஆனால்,நானோ,

உன்னைக் காதலிக்க பிறந்து விட்டதால் ,

உன் முகம் பார்க்காத நாட்களிலும்,

உன் பார்வை தீண்டாத கணங்களிலும்,

உன் குரல் கேட்காத கனவுகளிலும்...

ஓவியனில்லா தூரிகையாய்...

சிற்பி தீண்டாத கற்களாய் ....

ஸ்ருதியில்லா ஸ்வரங்களாய்...

சிதறிக் கிடக்கும் சொற்களாய்....

தவிக்கிறேன்...............

Wednesday, August 19, 2009

பூக்களும்... இசையும்... மழையும்...

பூக்களும்... இசையும்... மழையும்...
வாழ்வின் இனிமையான தருணங்களில்
மகிழ்ச்சியைக் கூ ட்டு வ தை விடவும்....
துக்கங்களில் மனதுக்கு ஆறுதலாய் உணர்த்துவதிலும்
அதன் மகத்துவம் நிறைந்திருப்பதால் தான்
அதன் அருகாமையை மனம் என்றும் நாடுகிறது...
உனது அருகாமையைப் போலவே...

Monday, June 29, 2009

எப்போ விளம்பரம் போடுவாங்க?

எப்போ இந்த சீரியல் முடியும்?
எப்போ விளம்பரம் போடுவாங்க?
அம்மா எப்போ வருவாங்க?ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்தாள்
விளம்பர மாடலின் மகள்....
தொலைக்காட்சியிலாவது
தன் தாயைப்பார்த்துக் கொண்டிருக்கலாமென்று. . .

உலகின் மிக வலிய ஆயுதம்....

உலகின் மிக வலிய ஆயுதம்
அன்பென்பது உண்மை தான் ....

எதிர்பார்த்த இடத்தில்
எதிர்பார்த்த அன்பு
கிடைக்காத போது. .
அந்த அன்பை விட
மிக மோசமானதாய்த் தாக்கும் ஆயுதம்
இவ்வுலகில்
வேறொன்றும் ஈடானாதாய் இல்லை......

Monday, June 22, 2009

ஒரு முறையேனும் திரும்பி வந்து விடு....

ன்றாடம் நடக்கும் வகுப்புகளுக்க்காய்....

சையாய் வாங்கும் திட்டுகளுக்காய்....

ம்சையாய்ப் புரட்டும் புத்தகங்களுக்காய்.....

ன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தேர்வுகளுக்காய்.....

வகையோடு உறங்கிய பாட வேலைகளுக்காய்.....

ரோடு ஒத்து வாழ்ந்து மட்டமடித்த வகுப்புகளுக்க்காய்.....

ழுதியும் எழுதாமலும் பெற்று விட்ட அரியர்களுக்க்காய்....

ங்கிக் கிடந்த விடுதலைக்காய்......

யங்கள் இல்லாத சந்தோஷத்துக்காய்.....

ரு முறையேனும் திரும்பி வந்து விடு -எங்கள்

டிப் போன கல்லூரி வாழ்க்கையே .....

ரு முறையேனும் திரும்பி வந்து விடு !

அது காதல் இல்லை என்று

காதல் பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல் நினைவில் வந்தாய்


காதல் வசனங்களைக் கேட்கும் போது

காரணமில்லாமல் நினைக்க வைத்தாய்


காதல் ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல் கனவாய் வந்தாய்

அப்போது புரியவில்லை
காதலிக்க காரணம் தேவையில்லை என்று

இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்

அது காதல் இல்லை என்று

என் கவனம் . . .

நான் பரிட்சையில் தவறிய போதெல்லாம்

என் கவனம் சிதறி விட்டது

என்று திட்டும் என் தந்தையை

ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்

என்று?

என் கவனம்

உன்னை விட்டு சிதறி இருக்கிறதென்று??? :)

Saturday, April 18, 2009

கூந்தலின் வாசம்

உன் கூந்தலில் இருந்து பூ விழுந்தது
கையில் எடுத்து
முகர்ந்து பார்த்தேன்....

உன் கூந்தல் வாசம் ............

Saturday, March 21, 2009

மீண்டும் ஒரு ஜென்மம்

உன் உயிரைப் பணயம் வைத்து

ஈரைந்து மாதங்கள் கருவில் சுமந்து

உன் உயிரிலே பாதியை செலுத்தி

என்னைப் பெற்றெடுத்து

இவ்வுலகிற்குஎன்னை ஈன்ற தாயே

கண்ணின் மணியாய்

உயிரின் உயிராய்

என்னை காத்து

காலமெல்லாம் என்னைநெஞ்சிலே சுமக்கிறாய் நீயே

உன் எல்லை இல்லா அன்புக்கும்

உன் முடிவில்லா சேவைக்கும் ஈடு செய்ய

இவ்வுலகில் இந்த ஜென்மத்தில் எதுவுமில்லை ஈடாக

தெய்வத் திடம் வேண்டுவேன்

மீண்டும் ஒரு ஜென்மம்

நான் உன் தாயாக.....

Thursday, March 19, 2009

மழை - மின்னல்

சிரிக்க வைத்து அல்ல

அழ வைத்து எடுக்கும் புகைப்படம்

மேகத்தை அழ வைத்து வானம் எடுக்கும் மின்னல் படம்